என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குஜராத் தேர்தல்"
- 2027-ல் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என கெஜ்ரிவால் நம்பிக்கை
- சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
புதுடெல்லி:
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டெல்லி மாநகராட்சியை வென்று விட்டோம். கோவாவில் 2 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளார்கள். குஜராத்தில் 14 சதவீத வாக்கு வங்கியுடன் 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ளோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல. இந்த வெற்றிக்குப் பிறகு என்னிடம் பேசிய ஒருவர், நீங்கள் காளையிடம் பால் கறந்துவிட்டீர்கள் என்றார்.
அந்த அளவுக்கு கடினமான வெற்றி இது. பசுவில் பால் கறக்க அனைவராலும் முடியும். ஆனால், குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் வாக்குகள் பெற்று நாங்கள் காளை மாட்டில் பால் கறந்துள்ளோம். இதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி. எனவே கட்சியினர் கவலைப்பட வேண்டாம், 2027-ல் நாம் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்.
சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பொருட்களை யார் வாங்குகிறார்கள்? சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பாஜகவுக்கு என்ன நிர்ப்பந்தம்? நமது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியாதா? நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதே பொருட்களை சீனாவிலிருந்து வாங்குகிறோம்.
மோடி அரசுக்கு ராணுவ வீரர்களின் உயிர் மீது அக்கறை இல்லை. இந்திய மக்களை விரட்டி அடிக்கும் பாஜக அரசு, சீன மக்களை கட்டிப்பிடிக்கிறது. வியாபாரிகள், தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரு கட்சி ஊழலில் சிக்கியுள்ளது, மற்றொரு கட்சி குண்டர்களை ஊக்குவிக்கிறது மற்றும் குண்டர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கியப் பங்காற்றியது.
ஜெய்ப்பூர்:
குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வென்றது. சுமார் 13 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பை பறித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு ஆம் ஆத்மி தான் முக்கிய காரணம் என கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
குஜராத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றியது. ஆம் ஆத்மி இல்லாவிட்டால், ஆளும் பாஜகவை தோற்கடித்திருப்போம்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பினாமியாக செயல்பட்டது. அந்த கட்சி பாஜகவின் பி டீம், காங்கிரசை வீழ்த்த பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது. அவர்கள் (பாஜக) இந்தியாவைப் பிளவுபடுத்துகிறார்கள், வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். அவர்கள் கொள்கையில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதை காங்கிரஸ் புரிந்துகொள்ளும்போது ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
- பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி 156 இடங்களை கைப்பற்றியது. கடந்த முறையை விட கூடுதலாக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. 60 தொகுதிகளை அந்த கட்சி இழந்தது. புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 5 தொகுதிகளை வென்றது. பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் குஜராத் முதல்வரின் பதவி ஏற்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றப்பட்டு அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் மற்ற மந்திரிகளும் பங்கேற்றார்கள்.
பா.ஜனதா ஆளும் முதல்-மந்திரிகளான யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), மனோகர்லால் கட்டார் (அரியானா), சிவ்ராஜ்சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), பசவராஜ் பொம்மை (கர்நாடகா), புஷ்கர்சிங்தாமி (உத்தரகாண்ட்) மற்றும் கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் சந்தோஷ், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- குஜராத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது.
- திறமையான தலைவர்களை அடையாளம் காணவில்லை.
பெங்களூரு :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கட்சிக்கு முன்பு வெற்றியை தேடி தந்தவர்களை கட்டாயம் மதிக்க வேண்டும். இமாசலபிரதேசத்தில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் மனைவிக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த முயற்சி அங்கு வெற்றி பெற்றுள்ளது. அங்கு 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
சோதனையான காலக்கட்டங்களில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தியவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களை புறக்கணித்ததால் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குஜராத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலங்களின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில தலைவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது.
கட்சிக்கு நேர்மையாக, விசுவாசமாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்க வேண்டும். 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று நல்ல ஆதரவை காங்கிரஸ் பெற்றது. ஆனால் அதன் பிறகு உள்ளூர் தலைவர்களுக்கு உரிய பதவி வழங்கவில்லை. திறமையான தலைவர்களை அடையாளம் காணவில்லை.
இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.
- குஜராத்தில் பா.ஜ.க. தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.
- இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
புதுடெல்லி :
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சாதனை வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நோட்டா ஓட்டுகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று கூறி அவர்களை நிராகரிக்கும் வகையில் கடைசியில் இடம்பெறுகிற சின்னத்தில் பதிவு செய்கிற வாக்கு ஆகும்.
இந்த சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 202 ஓட்டுகள் விழுந்துள்ளன. மொத்த வாக்குகளில் இது 1.5 சதவீதம் ஆகும். கடந்த 2017 தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 594 ஆகும். இத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இந்த தேர்தலில் அதிகபட்சமாக கேத்பிரம்மா தொகுதியில் நோட்டாவுக்கு 7 ஆயிரத்து 331 ஓட்டுகள் விழுந்தன. தண்டா தொகுதியில் 5 ஆயிரத்து 213 வாக்குகளும், சோட்டா உதய்பூரில் 5 ஆயிரத்து 93 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.
- ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.
அகமதாபாத் :
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றி, தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன. அது பற்றிய ஒரு பார்வை வருமாறு:-
சவுராஷ்டிரா பகுதியில் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. அங்கு மொத்தம் 48 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 40 இடங்களை பா.ஜ.க. தன்வசப்படுத்தி உள்ளது. கடந்த முறை இந்த பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களை பெற்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி அங்கு வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.
ஆம் ஆத்மிக்கு இந்தப் பகுதியில் 4 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசை விட ஒரு இடம் ஆம்ஆத்மிக்கு கூடுதலாக கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
சமாஜ்வாடி வேட்பாளர் காந்தல் ஜடேஜா குட்டியானா தொகுதியில் வெற்றிக்கொடி கட்டி இருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கு சவுராஷ்டிரா பகுதியில் 48.23 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் காங்கிரசுக்கு 26 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆம் ஆத்மிக்கு 20 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. காங்கிரசின் வீழ்ச்சிக்கு ஆம் ஆத்மி இங்கு வழிவகுத்துள்ளது.
2017 தேர்தலில் காங்கிரசுக்கு 45.37 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 44.90 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அதன் பலத்தை 99 இடங்களுடன் காங்கிரஸ் கட்டுப்படுத்தியது என்றால், அதற்கு பட்டிதார் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகள் கை கொடுத்ததுதான் காரணம் ஆகும்.
இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசில் இருந்து கட்சி தாவியவர்களுக்கும், புதுமுகங்களுக்கும் டிக்கெட் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
மத்திய குஜராத் பகுதியில் பா.ஜ.க. 61-ல் 56 இடங்களைப் பிடித்துள்ளது. 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆம் ஆத்மி 8 தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளது.
5 முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மது ஸ்ரீவஸ்தவ் சுயேச்சையாக வகோடியா தொகுதியில் களம் இறங்கினார். இங்கு பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வின் படேல் தோற்றார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மேந்திர வகேலா வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆமதாபாத், வதோதரா, நாடியத், உம்ரெத், மட்டார் நகர்ப்புறங்களிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு குஜராத்தில் 32 இடங்களில் 22 இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வென்றுள்ளனர்.
கடந்த 2017 தேர்தலில் இந்தப் பகுதியில் காங்கிரசுக்கு 17 'சீட்டு'களும், பா.ஜ.க.வுக்கு 14 'சீட்டு'களும் கிடைத்தன.
தெற்கு குஜராத்தில் 35 இடங்களில் 33 இடங்களில் பா.ஜ.க. வென்றிருக்கிறது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.
சூரத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களையும் அப்படியே பா.ஜ.க. வாரிச்சுருட்டி விட்டது. கட்ச் பகுதியிலும் இதே கதைதான். 6 இடங்களையும் பா.ஜ.க. அள்ளியது. காங்கிரஸ் கட்சி இருந்த 2 இடங்களையும் இழந்துள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாத போதும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது.
ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய ஆம் ஆத்மிக்கு 5 இடங்களே கிடைத்தாலும், அதில் அந்தக் கட்சி திருப்தி அடைந்துள்ளது.
இதுபற்றி அதன் மாநில தலைவர் கோபால் இடாலியா கருத்து தெரிவிக்கையில், "எங்கள் கட்சி குஜராத்தில் பா.ஜ.க.வின் கோட்டையில் குறிப்பிடத்தக்க அளவில் நுழைந்து இருப்பதே வெற்றிதான். இது கெஜ்ரிவாலின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி" என குறிப்பிட்டார். ஆனால் இவரும் சூரத்தில் உள்ள கட்டார்காம் தொகுதியில் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
- பூபேந்திர படேலின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி இது.
கவுகாத்தி :
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து உள்ளது. இந்த வெற்றி வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குஜராத் வெற்றி, இந்தியாவுக்கு. பிரதமர் மோடிஜி மீது கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையால் இந்த வரலாற்று தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம், மக்கள் 2024-க்கான பாதையைக் காட்டியுள்ளனர்' என குறிப்பட்டு இருந்தார்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, மத்திய மந்திரி அமித்ஷாவின் வியூகம், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர படேலின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி இது எனவும் அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
- பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.
- பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது.
புதுடெல்லி :
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
குஜராத்தில் பா.ஜனதாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த அம்மாநில மக்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக மோடியின் தலைமையின் கீழ், குஜராத்தில் அனைத்து வளர்ச்சி சாதனைகளையும் பா.ஜனதா முறியடித்தது. தற்போது, பா.ஜனதாவை மக்கள் ஆசீர்வதித்து, அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்கச் செய்துள்ளனர்.
இந்த அமோக வெற்றியால், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பா.ஜனதாவுடன் இருப்பது தெளிவாகிறது. இலவசம், வெற்று வாக்குறுதிகள் ஆகியவற்றை அளிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் நலனுக்காக பாடுபடும் மோடியின் பா.ஜனதாவுக்கு முன்எப்போதும் இல்லாத வெற்றியை அளித்துள்ளனர்.
இந்த வெற்றிக்காக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, முதல்-மந்திரி பூபேந்திர படேல், கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குஜராத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த சரித்திர வெற்றி, வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவை மீது பா.ஜனதா கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
இந்த வெற்றிக்கான பெருமை, பிரதமர் மோடியின் தலைமை, அவரது புகழ், நம்பகத்தன்மை ஆகியவற்றையே சாரும்.
ஜே.பி.நட்டா, அமித்ஷா, பூபேந்திர படேல், சி.ஆர்.பட்டீல் ஆகியோரின் கடின உழைப்பால், பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குஜராத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- பிரதமர் மோடி பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
புதுடெல்லி :
குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டை என நிரூபித்து இருக்கிறது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
குஜராத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும், பா.ஜனதா மீது மக்கள் தொடர்ந்து பொழிந்து வரும் அன்பின் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடித்து வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
குடும்ப ஆட்சி மற்றும் அதிகரிக்கும் ஊழல் மீதான மக்களின் கோபத்தையே இந்த வெற்றி காட்டுகிறது.
ஏழை, நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளையும் விரைவாக எடுத்துச்சென்றதால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து உள்ளனர்.
இமாசல பிரதேசத்திலும் பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சியை விட ஒரு சதவீத வாக்குகளே நமக்கு குறைந்திருக்கிறது.
மக்களுக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதம் மகத்தானது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- குஜராத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
- தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை.
அகமதாபாத் :
குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தகோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்பட எல்லாவற்றையும் காங்கிரஸ் சரியாகச் செய்திருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை என தெரிகிறது' என தெரிவித்தார்.
குஜராத்தில் புதிய அரசை அமைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வு காணும் என நம்புவதாகவும் கூறினார்.
இதற்கிடையே குஜராத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ரகு சர்மா ராஜினாமா செய்து உள்ளார்.
- 1985-ல் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையை பாஜக முறியடித்தது.
- கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
அகமதாபாத்:
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பாஜக வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. வெற்றி பெற 92 இடங்கள் தேவை என்ற நிலையில், 150க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆளும் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி, 7வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் 2002-ல் 127 இடங்களை கைப்பற்றி பாஜக சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இந்த தேர்தலில் முறியடித்தது மட்டுமல்லாமல், 1985-ல் மறைந்த மாதவ்சிங் சோலங்கியின் தலைமையில் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையையும் முறியடித்தது.
காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக குஜராத்தில் கால் பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் 49 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகள் 42 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
மொத்த தொகுதிகள்- 182
பாஜக- 156
காங்கிரஸ்- 17
ஆம் ஆத்மி கட்சி - 5
சுயேட்சைகள் - 3
மற்றவை - 1
- குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 12.92 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன
- ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்
புதுடெல்லி:
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி, பாஜக 149 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 12.92 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்துள்ளது ஆம் ஆத்மி. இதன்மூலம் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது.
இதுபற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 40 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்